உத்திரமேரூர் அருகே தனியார் பேருந்தில் அரசு கல்லூரி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டு ஜன்னல் ஏணியில் ஏறி தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளன. அதேபோல் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இதனால் உத்திரமேரூர் வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்கின்றனர்.

அப்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படியில் படிக்கட்டு தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பள்ளி கல்வி துறை சார்பில் உத்திரமேரூர் வட்டார அளவிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை திருவிழா, நடன போட்டிகள் திருப்புலிவனம் அரசு கலைக்கல்லூரி மற்றும் உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. அதற்காக மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக அளவில் பேருந்துகளில் சென்றதால் பேருந்துகளில் கூட்டம் அளவுக்கு மிறி அதிகரித்து காணப்பட்டது.
அந்த வகையில் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் பலர் பேருந்தின் படிக்கட்டுகள், ஜன்னல், ஏணியில் ஏறி ஆபத்தான நிலையில் தொங்கிய படி பயணம் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் பொது கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் உத்திரமேரூர் பகுதியில் கூடுதலாக பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்கத்தால் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்வது தொடர் கதையாக உள்ளது.
எனவே அரசு உத்திரமேரூர் பகுதியில் பள்ளி நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.