கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், பொது சொத்துக்களை தகர்த்து எறிவதும், உடைத்தெறிவதுமான பல செயல்களில் ஈடுபட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்
அந்த வகையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி நரசிபுரம் பிரிவு அருகே ராசு கவுண்டர் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருபவர் பத்மா(47). இவர் இன்று காலை வீட்டில் உறங்கி கொண்டிருக்கையில், நீண்ட நேரம் நாய் குரைத்து கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அவர் வெளியே சென்று பார்க்கையில், ஒற்றை காட்டுயானை அரிசி மூட்டைகளை சாப்பிட்டு கொண்டிருந்துள்ளது.

அதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்த நிலையில் எதிர்பாராத விதமாக யானை அவரை தாக்கிவிட்டு சென்றுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பத்மாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் யானை ஒன்று நரசிபுரம் ஊருக்குள் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.