15 ஆண்டுகள் வங்கதேசத்தின் பிரதமர்
தற்போது வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். வங்கதேசம் மட்டுமல்லாது சர்வதேச பெண் தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தது ஹசீனாதான் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷேக் ஹசீனா தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். இங்கிலாந்தின் மார்கரெட் தாட்சர், இந்தியாவின் இந்திரா காந்தியைவிட ஹசீனா அதிக தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். 76 வயதான ஹசீனா கடந்த 2008ம் ஆண்டு முதல் வங்கதேசத்தின் பிரதமராக இருந்து வருகிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் பெண் தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்கிற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.
ஷேக் ஹசீனாவுக்கு 2–வது முறையாக அடைக்கலம் தந்த இந்தியா
இவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானால் நிறுவப்பட்ட அவாமி லீக் கட்சிக்கு ஹசீனா கடந்த 1981 முதல் தலைமை வகிக்க தொடங்கினார். முதன் முதலாக 1996 பொதுத்தேர்தலில்தான் பிரதமராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2009-2014 வரை, 2014-2019 வரை, 2019-2024 வரை இறுதியாக 2024 தேர்தலிலும் ஹசீனா வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தமாக வங்கதேசத்தின் பிரதமராக இவர் 5 முறை பதவி வகித்திருக்கிறார். தொடக்க காலத்தில் இவருடைய பல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக பொருளாதார முன்னேற்றம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தியது. தாராளமயத்தை கொண்டு வந்து, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது, பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கியது போன்றவை பெரிதும் பாராட்டப்பட்டது. தாராளமய நடவடிக்கையால் வங்கதேசம் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டது. இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டது.
என்னதான் பாசிட்டிவ்வான விஷயங்கள் இருந்தாலும், அதில் சில நெகட்டிவிட்டி இருக்கத்தானே செய்யும். அதுபோல, இவரது ஆட்சிக்காலத்தில் நீதித்துறையில் முறைகேடுகள் பல நடந்தன. இது அரசியல் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இஸ்லாமிய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு எதிரான அவரது ஒடுக்குமுறை, மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களை அதிகரிக்க செய்தது. இப்படியாக உலகின் நீண்ட காலம் அரசியல் அதிகாரத்தில் ஹசீனா இருந்திருக்கிறார்.
ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார். வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார்.ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா – வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.