சாந்தன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், அவரது சொந்த நாடான இலங்கை திரும்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இலங்கை தமிழர் சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2022 ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்குப் பின்னர் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என அவர் கோரி வந்தார்.
உடல்நலக்குறைவு.
இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சாந்தனை இலங்கை நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அண்மையில் அனுப்பியது.
32 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை செல்ல ஏற்பாடு
சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு அனுப்பியது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலையில் சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சாந்தன் இறந்தார்
சாந்தனின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாந்தனின் மறைவுக்கு தமிழ் தேசிய உணர்வாளர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.