தானியங்கி இயந்திரம் மதுபான விற்பனை விவகாரத்தில் இருப்பைக் காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என அமைச்சர் செந்திபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல் முறையாக தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி உள்ளது. இது 24 மணிநேரமும் திறந்து இருக்காது என்றும் டாஸ்மாக் திறந்து இருக்கும் நேரம் மட்டுமே இதுவும் திறந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடை பொறுப்பாளர் தான் இதனை இயக்க முடியும். இதன் மூலம் சில்லறை விற்பனைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்கவே இந்த இயந்திரம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் தனது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தானியங்கி இயந்திரத்தில் மது விற்பனையை அரசு தொடங்கி இருப்பது கண்டனத்திற்குரியது. மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை அரசு தூண்டுகிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முடிவை அரசு உடனே கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக,”கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என கூறியுள்ளார்.