செந்தில் பாலாஜி விடுதலைக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்ததுபோல ,அமைச்சரவையில் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு செஞ்சி மஸ்தான் உட்பட 3 அமைச்சர்கள் ஆளுநர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டுள்ளனர் .
மேலும் திமுக தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் .
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட காலமாகவே உறுதி படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது . இதில் முக்கியமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன்னதாகவே உதயநிதி ஸ்டாலின்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை ஆனதை ஒட்டி , சனிக்கிழமை மாலை தமிழ் நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செஞ்சி மஸ்தான் , மனோ தங்கராஜ் உள்ளிட்ட ௩ அமைச்சர்கள் நீக்கப்படுவதாகவும் , செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது .
மேலும், உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளும் மாற்றப்பட்டு இருந்தது. அதேபோல உதயநிதி துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பும் அதில் இருந்தது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கோவி செழியன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சராகப் பதவியேற்றனர்.

6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் :
6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
- உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி – வனத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு .
- சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு .
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜு – மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு .
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் – ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு .
- அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் , அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டனர் .