திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூட்டிய வீட்டிற்குள் செம்மர கட்டைகள் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் பதுக்கி வைத்து இருந்த சுமார் ஒரு டன் அளவிலான செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட செம்மரங்கள் எந்த வனப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது, என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டதா? என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் வனத்துறையினர். மேலும் கிருஷ்ணமூர்த்தியின் மீது இது போன்ற வேறு சில வழக்குகள் இருக்கின்றனவா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தனி நபராக இந்த செம்மரங்களை பதுக்கி வைத்திருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் அவர்கள் யார் என்று விரைவில் பிடிபடுவார்கள் என்றனர் வனத்துறையினர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்கின்றனர் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர்.