உளுந்தூர்பேட்டை அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய பள்ளி மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் விளையாட்டாக செய்ததால் கவுன்சி லிங் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். தென் மாவட்ட மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் வந்தே பாரத் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 4 ஆம் தேதி திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது.

இந்த ரயில் மாலை 5 மணி அளவில் திருவெண்ணைநல்லூருக்கும், உளுந்தூர்பேட்டைக்கும் இடையே காந்தி நகர் ரயில்வே கேட்டை கடந்து சென்றது. அப்போது திடீரென ரயில் பெட்டிகள் மீது கல் வீசப்பட்டது. இதில் ரயில் பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து, சேதம் அடைந்தது. இது குறித்து ரயில் என்சின் டிரைவர் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ரயில்வே அதிகாரிகள் இது பற்றி விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சாருக்கு தகவல் அளித்தனர்.
இதை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் காந்திநகர் ரயில்வே கேட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் சிலர் விளையாட்டாக கல் வீசியதும், அதன் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்ததும், தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ரயில் பெட்டி மீது கல் வீசிய 3 சிறுவர்களை கண்டறிந்து நேற்று முன்தினம் அவர்களே விழுப்புரம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இது சம்பந்தமாக விசாரித்த நீதிபதி விளையாட்டாக கல் வீசியதால் அவர்களுக்கு கவுன்சி லிங் வழங்கும்படி அறிவுறுத்தினார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினர் அந்த குழந்தைகளிடம் ரயில் மீது கல் வீசினால் பயணிகளுக்கு எந்த விதத்தில் ஆபத்து நேரிடும் என என்பதை உணர்த்தி தகுந்த அறிவுரை வழங்கி, அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.