கடந்த 08.11.2033 அன்று தனிப்பட்ட பயணமாக தென்கொரியாவிற்கு வருகைதந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவினர் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சொங்னம் பகுதியில் அமைந்துள்ள பூப்பியாங் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வகம், உணவகம் உள்ளிட்டவற்றை பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அமைச்சர் பார்வையிட்டார். அமைச்சர் அவர்களுடன் முன்னதாக கொரியாவிற்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரும், மேலும் கொரிய தமிழ்ச்சங்க ஆளுமைக்குழுவினரும் உடன் சென்றனர்.பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் கச்சான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களை பார்வையிட்டனர்.

கச்சான் பல்கலைக்கழகத்தின் உயிரி-மீநுண் தொழில்நுட்பவியல் (Nano-biotechnology) ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேரா. ஜொங்சுங் கிம் மற்றும் இணை தலைவர் பேரா. கியூசிக் யூன் ஆகியோர் நமது பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேநீர் விருந்து வழங்கி கௌரவித்தனர். கொரியாவின் கல்வி முன்னேற்றம் பற்றியும், வளர்ச்சி பற்றியும், எடுத்துரைத்தனர். தமிழ்நாடு அரசின் இத்தகைய செயலுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கச்சான் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கையும் எடுத்துரைத்து வரும் காலங்களில் பல தமிழ் மாணவர்களுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தனர்.
கொரிய தமிழ்ச் சங்கத்தால் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கொரிய தமிழ்ச்சங்கத்தின் கலைக்குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி துவங்கப்பெற்றது.சங்கத்தின் தலைவர் முனைவர். அரவிந்த ராஜா அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை வழங்கியும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கைகளை அமைச்சர் முன் வைத்தும் அமர்ந்தார். சங்கத்தின் ஆளுமை செயலாளர் ஆராய்ச்சியாளர் சகாய டர்சியூஸ் பீ மாண்புமிகு அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தும், அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். பின்பு, முனைவர் விஜய் அசோகன் அவர்கள், தமிழ் நாட்டின் பள்ளிக்கல்வித்துறை நிகழ்த்திய சாதனைகள் குறித்து உரையாற்றினார்.

அமைச்சர் அவர்கள், அரசுப்பள்ளி மாணவர்களின் வியத்தகு சாதனைகள் குறிப்பாக முதன்மை கல்வி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் ஐஐடி (IIT), என்ஐடி (NIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்திய முன்னெடுப்புகளின் விளைவாக 247 மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்ற மகத்தான சாதனையை குறித்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள், செயல்திட்டங்கள், குறிப்பாக உலகில் பல பகுதிகளில் பரவி வாழும் தமிழ் மாணவர்களிடையே தமிழ் கற்றலை எளிதாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழறிஞர்கள் உதவியுடன் தயாராகி வரும் மணற்கேணி செயலி குறித்தும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட குருத்தணு (Stem-cell) பாடத்திட்டம் பற்றியும் மேலும் தமிழ்-கொரிய தொடர்புகள், சார்ந்த ஆராய்ச்சிகள் குறித்தும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் முந்தைய செயல்பாடுகள் குறித்து பாராட்டியும் சிறப்புரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு முடித்த பின்னர் பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்படும் பட்டயம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இங்கே கொரியாவில் ஆராய்ச்சி உள்ளிட்ட மேற்படிப்புகள் படிக்க இடம் கிடைத்தும் சான்றிதழ் சரியான நேரத்தில் வழங்கப்படாததால் தமிழ் நாட்டின் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் முனைவர். சத்தியமூர்த்தி எடுத்துக்கூறி விரைவில் தீர்வு காணவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார்.கொரியாவில் மேற்படிப்பிற்காக வாய்ப்புகள், சேருவதற்கான வழிமுறைகள் குறித்து கொரிய தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் முனைவர். ராஜப்ரியா கோவிந்தராஜூ அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார். அதன் தொடர்ச்சியாக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினார்கள்.