நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் கைதிகளின் பல்லை கொடூரமாக பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
நெல்லையில் போலீஸ் அதிகாரி, கைதிகளின் பல்லை பிடுங்கியதாக எழுந்த புகாரில் மேலும் ஐந்து நபர்கள் சார் ஆட்சியரிடம் ஆஜராகி புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்த சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சிபிஐ விசாரணை கோர இருப்பதாக தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் கைதிகளின் பல்லை கொடூரமாக பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று வரை, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் லட்சுமி சங்கர், சூர்யா, வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய நான்கு பேர் ஆஜராகி இருந்தனர்.
இதில் சுபாஷ் தவிர மீதம் உள்ள மூன்று பேரும் போலீஸ் அதிகாரி தனது பல்லை பிடுங்கவில்லை என சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில் சுபாஷ் உடன் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செல்லப்பா, ரூபன், அந்தோணி, இசக்கிமுத்து, மாரியப்பன் மற்றொரு வேத நாராயணன் ஆகிய ஐந்து பேருக்கு சார் ஆட்சியர் சம்மன் அனுப்பாததால் அவர்கள் விசாரணைக்கு வந்தும் அவர்களிடம் சார் ஆட்சியர் விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பினார்.

தொடர்ந்து சம்மன் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவாகரத்தில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என சார் ஆட்சியர் திடீரென அறிவித்தார்.
இதற்கிடையில் செல்லப்பா உள்பட ஆறு பேர் நேற்று சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து செல்லப்பா உள்பட ஐந்து பேருக்கும் சார் ஆட்சியர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பெயரில் அவர்கள் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அனைத்து விளக்கங்களும் எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொண்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கிய பின் விசாரணை நிறைவடைந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட செல்லப்பா கூறுகையில்… மனித உரிமை ஆணையத்திடம் ஆஜராகி விளக்கம் அளித்தோம். இன்று சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறோம். வழக்கு விவரங்கள் குறித்து முழுமையாக அவர் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் எனது சகோதரரான மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்ல உடல் நிலையுடன் இருந்த அவர் ஏ எஸ் பி யின் தாக்குதல் காரணமாக உடல் நலிவுற்று அவதிப்பட்டு வருகிறார். பற்கள் முழுவதும் சேதம் அடைந்ததன் காரணமாக அவரால் உணவு கூட உட்கொள்ள முடியவில்லை. அவரது ஆணுறுப்பு ஏ எஸ் பி தாக்குதலுக்குள்ளானதால் அவரால் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லை. சிறுநீரில் ரத்தம் கலந்து வந்ததை அடுத்து தற்போது அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இளவட்ட கல்லை தூக்கும் அளவிற்கு திடகாத்திரமாக இருந்தவர் ஏஎஸ்பி தாக்குதலின் காரணமாகவே உடல் நலிவுறும் சூழல் ஏற்பட்டது என தெரிவித்தார் .
இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறுகையில், சார் ஆட்சியர் முறையாக விசாரணை நடத்தவில்லை, அவரது விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, இதன் காரணமாக மனித உரிமை ஆணையத்தை நாடி அங்கு விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை எனவே நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை கோருவோம் என அவர் தெரிவித்தார்.