செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்தவர் சர்புதீன் , இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இவர் இரும்பு கழிவு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சர்புதீன் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.3
இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் காருக்குள் உட்கார்ந்து இருக்கும்போது மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சர்புதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்ட பகலிலேயே இது போன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.