நாமக்கல் மாவட்டத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில், முட்டையிடாத வயது முதிர்ந்த கோழிகள் இறைச்சிகளுக்கும், நோய்பட்டு உயிரிழக்கும் கோழிகள், பண்ணையிலையே குழி தோண்டி புதைத்து விடுவது வழக்கம்.
ஆனால் நாமக்கல்லில் உள்ள ஒரு சில கோழி இறைச்சி கடையின் உரிமையாளர்கள் பண்ணைகளில் நோய்பட்ட கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்கும் நோக்கில் மக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.இது பற்றி பலமுறை பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

நாமக்கல் மோகனூர் சாலையில் பெயர் பலகை இல்லாத இறைச்சி கடைக்கு மினி சரக்கு வாகனத்தில் நோய்பட்டுள்ள கோழிகளை கொண்டு வந்து இறக்கி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறையினர் பூட்டிருந்த இறைச்சிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கடைக்கு முன் இறக்கி வைக்கப்பட்ட அனைத்து கோழிகளும் நோய்யுடன் காணப்பட்டதோடு சில கோழிகள் இறந்தும் கிடந்தது.
இதன் பின் அப்பகுதியில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்த போது, தினந்தோறும் பகல் நேரத்தில் கோழிகளை இறக்கிவிட்டு சென்று விடுவார்கள்.பின் இரவு நேரத்தில் அந்த கோழிகளை சுத்தம் செய்து பின்னர் வெளியில் கொண்டு செல்வர் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் நகராட்சிக்கு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் அங்கு வந்து கூண்டுகளுக்குள் இருந்த கோழிகளை வாகனத்தில் எடுத்து சென்று புதைத்தனர்.
நோய்பட்டிருக்கும் கோழிகளை சுத்தம் செய்து நாமக்கல்லில் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறதாக? அல்லது இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தினால் மட்டும் உண்மையான நிலவரம் தெரியவரும். மேலும் மக்களின் உடல் நலம் கருதாமல் நோய்பட்ட கோழிகளை விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.