திருவண்ணாமலை மாவட்டத்தில் கியாஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி 4 ஏ.டி.எம். மையங்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர்கொண்ட வடமாநில கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் , இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கொள்ளை கூட்ட கும்பல் தலைவனை தனிப்படையினர் அரியானாவில் வைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர் .
தனிப்படையினரின் இந்த துணிச்சலான செயலை பாராட்டி தமிழ்நாடு டிஜிபி ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளார் .
திருவண்ணாமலை , போளூர் உற்பட 4 இடங்ககளில் செயல்பட்டு வந்த காவலாளிகள் இல்லாத 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ரூபாய் 73 லட்ச ரூபாய் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது .
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது , மேலும் இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது .

போலீசாரின் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கருவிகளை ஆய்வு செய்ததில் இந்த 4 ஏ.டி.எம் கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருப்பதாகவும் , அவர்கள் வெளி மாநிலத்தவர் போல் தோற்றத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது .
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் , திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் , ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரன்சுருதி மற்றும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகளை அமைத்து , இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை பல்வேறு மாநிலங்களில் இருந்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அரியானா மாநிலத்தை சார்ந்த ஆசிப் ஜாவெத் என்பதும் அவர் தற்பொழுது , அரியானா – ராஜஸ்தான் மாநில எல்லையிலுள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய ஆய்வாளர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் இந்த இரு மாநில எல்லை பகுதிகளிலும் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் .
இந்நிலையில் ஆசிப் ஜாவெத் ஆரவல்லி என்ற மலைப்பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது . குற்றவாளியை பிடித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தனிப்படையினர் தங்களது உயிரை பணயம் வைத்து , கொள்ளை கூட்ட தலைவன் ஆசிப் ஜாவெத்தை துப்பாக்கி முனையில் கைது செய்தனர் .
மேலும் அவரை விமானம் மூலம் தமிழகம் கொண்டுவந்து சிறையில் அடைத்தனர் . இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் இதுவரை ரொக்க பணம் ரூபாய் 20 லட்சம் , 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியினை தனிப்படையினர் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர் . இவர்களின் துணிச்சல் மிக்க செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு , தனிப்படையினருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .