சென்னை அடையாறு காந்தி நகரில் விஷ்வ பிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீடுகளுக்கு 11 சதவீதத்திற்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் முதலீடுகளை பெற்று விஷ்வ பிரியா நிதி நிறுவனம் மோசடி செய்ததாக வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் 2013 புகார் அளித்தார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விஷ்வ பிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் அதன் துணை நிறுவனங்களான அக்ஷயா பூமி இன்வெஸ்ட்மென்ட், பிரைவேட் லிமிடெட் என 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2020 அக்டோபர் 16 குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் 587 முதலீட்டார்கள் புகாரின் படி 3800க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் வாயிலாக 47.68 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. விசாரணையின் போது இயக்குனர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான இயக்குனர் அப்பாதுரை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இந்த விசாரணை நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் டி.பாபு எம்.இ.வி.துளசி ஆஜராகினர்.

இருதரப்பு வாதங்களுக்கு பின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி பிறப்பித்த தீர்ப்பில் இயக்குனர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகளும், இயக்குனர் ஸ்ரீவித்யாவுக்கு நான்கு ஆண்டுகளும் மற்ற இயக்குனர், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மொத்த அபராத தொகையான 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் 180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது. இயக்குனர் ராகவன், மோகன் ராமசாமி ஆகிய இருவர் விடுவிக்கப்படுகின்றனர். இறந்த மூவரின் மீதான வழக்கு கைவிடப்படுகிறது என்று கூறியுள்ளார்.