தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரவு 10.30மணிக்கு காவல் நிலையம் தாக்கப்பட்டதுடன் ஆய்வாளர் ஜீப் , ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது .
காயமடைந்த காவலர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று (14-04-23) காலை முதல் இரவு வரை அம்பேத்கர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரியகுளம் பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினரும் காலை முதல் இரவு வரை ஊர்வலம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இரவில் கல்லுப்பட்டியில் இருந்து வந்த ஒரு பிரிவினருக்கும் பட்டாளம்மன் கோயில் தெருவில் இருந்த ஒரு பிரிவினருக்கும் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டாட்டம் தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது . சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது .
பின்பு இது குறித்து பெரியகுளம் வடகரை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது . காவல்துறையினர் தலையிட்டு மோதலை சரி செய்தனர். பிறகு கலவரத்தில் ஈடுபட்ட சிலரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் .
இருப்பினும் ஆவேசமடைந்த அந்த கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டவர்களை வெளியில் விடும்படி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தை கற்களால் தாக்கினர். இதில் அங்குள்ள ஆய்வாளர் ஜீப் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் கண்ணாடி உடைந்தது.
இதேபோல் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியையும் சிலர் உடைத்தனர்.
தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமேஷ் பிரவீன் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.