கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தானை சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர் விஷால் ஸ்ரீமல் என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில் விஷால் மரணத்திற்கு சலீம் அலி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி சக ஆராய்ச்சி மாணவர்கள் இன்று ஆராய்ச்சி மைய வளாகத்தில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி அமைதியான முறையில் சலீம் அலி சிலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷால் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி விஷால் புகைப்படம் மற்றும் வாட்டர் கேன் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் மையத்தில் தண்ணீர் இல்லாததால் கேன்டீனுக்கு தண்ணீர் எடுப்பதற்காக செல்லும்பொழுது விஷாலை யானை தாக்கியதாகவும், மையத்தில் போதுமான விளக்கு வசதிகளோ, டார்ச் லைட் போன்றவையோ இல்லாமல் இருப்பதாகவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.