அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு என ரெவின்யூ ரெக்கார்டுகளில் குறிப்பிடப்பட்டு வந்த பெயரை இந்திரா நகர் என மாற்றுவதற்கு அந்த ஊரைச் சேர்ந்த அனுசுயா Anusuya Saravanamuthu என்பவர் கடந்த ஒரு ஆண்டாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.
பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளை சாதி அடையாளத்தோடு ரெவின்யூ ரெக்கார்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். காலனி, சேரி, கீழத்தெரு, பள்ளத்தெரு இப்படித்தான் அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதே பெயர்தான் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களிலும் இடம்பெறும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது சாதிச் சான்றிதழைப் பார்க்காமலேயே அவரது சாதியைத் தெரிந்துகொள்ளும் இழிவான நோக்கம் கொண்ட ஏற்பாடுதான் இது.

இந்த நிலை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. பட்டியல் சமூக மக்களின் குடியிருப்புகளின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுமார் ஓராண்டுக்கு முன்பே மாண்புமிகு முதலமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.
இந்த நிலையில் ஆனந்தவாடியில் இந்திரா நகர் என்ற பெயர் சூட்டப் போராடிய அனுசுயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்! என ரவிக்குமார் எம்.பி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.