ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகாமையில் உள்ளது கேசவன்குப்பம் கிராமம். கோடை காலம் என்பதால் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை விட்டு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு வழி மாறி மான்கள் வருவது வழக்கம். இதேபோல் நேற்று சுமார் 2 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று தண்ணீர்தேடி கேசவன்குப்பம் கிராம விவசாய நிலத்திற்கு வந்தது .
அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்தப் புள்ளி மான் அருகாமையில் உள்ள சுமார் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதைக்கண்ட விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இதுகுறித்த தகவலை வன அதிகாரி துரைமுருகன் மற்றும் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அதிகாரி சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த அந்தப் புள்ளிமானை ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பிறகு அந்த புள்ளிமானை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.