ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், சுருதிஹா (5), தீபக் (3) இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கிராமத்தில் இருக்கும் பால்வாடியில் இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் அவரது தாய் ரேணுகா அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர்கள் மூவரும் நீண்ட நேரமாக வீடு வரவில்லை என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கிராமத்தின் அருகே உள்ள ஏரிக்கரை ஓரமாக கிணற்றில் மூன்று சடலங்கள் இருப்பதாக மாடு மேய்க்க சென்ற நபர் கிராமத்தில் உள்ள நபர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கலவை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இரண்டு குழந்தை மற்றும் தாய் என மூன்று சடலங்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து கலவை போலீசார் கிணற்றில் இறந்து கிடந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை யாராவது கொலை செய்தார்களா அல்லது தற்கொலையா என கலவை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கலவை அருகே மர்மமான முறையில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கிணற்றில் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.