நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை நேற்று வெளியிட்டது .
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , தற்போதைய வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்களாகத்தான் இருப்பார்களா ’ என தனது பிரச்சாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை தான் மறைமுகமாகத் தாக்கி பேசியதாகவும் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தீர்ப்பு வெளிவந்தவுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டி ‘எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே என் கடவுள். அதை அடைய அகிம்சை தான் வழி’ என பதிவிட்டிருந்தார் .
2 ஆண்டு சிறை தண்டனையால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்படுமா? என்ற அச்சத்தில் ராகுலின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் காட்சியனரிடையே நிலவிவருகிறது .
இதுகுறித்து உச்ச நீதிமன்ற முத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்ததால், அவர் எம்பி பதவியை உடனடியாக பறிக்க முடியாது என்றார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம். மேல் நீதிமன்றங்கள் , தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும் . தகுதி நீக்கத்தைப் பொறுத்தமட்டில் தண்டனை காலம் மற்றும் தண்டனை காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
ராகுல் காந்திக்கு அடுத்து வரும் 30 நாட்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க அல்லது ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தை அவர் அணுகி தீர்வு பெற்றால், அவர் தொடர்ந்து எம்.பி.யாக இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.