தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது,பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தீபாவளி போன்ற பண்டிகை தொடங்கவிருக்கும் நிலையில் வெங்காய விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
வெங்காய விலை உயர்வு. சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ70; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ 120-க்கும் சென்னை புறநகரில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ90; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் அண்மையில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் வெங்காய விலை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று, 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம் நாசிக், புனே, ஆந்திரா, ஆகிய பகுதிகளில் இருந்து புதுவைக்கு தினந்தோறும் 300 டன் வெங்காயம் வருவது வழக்கம்.இந்த நிலையில், நாசிக், புனேவில் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.இதனால், நேற்றுமுன்தினம் 150 டன் வெங்காயம் புதுவைக்கு வந்தது. தொடர்ந்து, வெங்காயம் கிலோ ரூ. 65-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.அதுவும் மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே வெங்காயம் காணப்படுகிறது. சில்லறை கடைகளில் வெங்காயம் தட்டுப்பாட்டுடன் காணப்படுகிறது.வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை கூடும் அபாயம் உள்ளது.
அதேநேரத்தில் வெங்காய விலை உயர்வானது விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலையும் தந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், கடந்த 2,3 மாதங்களாக வெங்காயத்தை குறைவான விலைக்குதான் கொடுத்தோம். தற்போது வெங்காய விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கொஞ்சமாவது ஆறுதலும் வருவாயும் கிடைக்கும். ஆகையால் வெங்காய விலையை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அரசு நடவடிக்கை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதி விலையானது ஒரு டன்னுக்கு 800 டாலர் அதாவது ரூ66,700 என நிர்ணயித்துள்ளது. இந்த விலை நிர்ணயமானது இன்று முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.