சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மறுநியமனப் போட்டித்தேர்வு இல்லாமல் பணியமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வந்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்பது போல 2500ரூபாய் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு என யாருக்கும், எதற்கும் உதவாத வாக்குறுதிகளை அளித்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவே செயல்படாத நிலையில், மீண்டும் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற முடியாது எனக்கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் காவல்துறையினரால் இன்று அதிகாலை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்