சென்ற வாரம் மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்த 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வங்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
கடந்த 8 ஆம் தேதி (ஆகஸ்ட் மாதம்) பணியில் இருந்த அந்த பெண் மருத்துவர் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணிபுரிந்ததாக கூறப்படுகின்றது. களைப்பின் காரணமாக அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர் மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் சற்று ஓய்வு எடுக்க எண்ணி அங்கு தூங்கி இருக்கிறார். அதன் பின்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாள், அதாவது 9 ஆம் தேதி காலையில் அவர் அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன :

ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி. அந்த பெண்ணுக்கு அந்த வன்கொடுமை நடந்த போதும், அதே கட்டிடத்தில் ஏராளமானோர் இருந்தனர். ஆனால், பயன் என்ன? இதை கயவர்களின் குள்ளநரித்தனம் என கூறுவதா, நம் அமைப்பின் கையாலாகாதத்தனம் என நொந்து கொள்வதா அல்லது பெண் மருத்துவரின் தலைவிதி என கடந்து செல்வதா?
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/horrible-female-doctor-gang-raped-and-murdered-in-kolkata/
நாடு தழுவிய போராட்டம் ஸ்தம்பித்துப்போன மருத்துவமனைகள்:
கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் பல மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை.
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (RG Kar Medical College and Hospital) நடந்த இந்த கொடிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு நீதி கோரி மருத்துவர்கள் தங்கள் ஜூனியர் மருத்துவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மேற்கு வங்கம் முழுவதும் சுகாதார சேவைகள் சனிக்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனன.

எட்டு நாட்களுக்கு முன்பு ஜூனியர் டாக்டர்கள் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) அழைப்பிற்குப் பிறகு இன்று நாடு முழுவதும் உள்ள மூத்த சுகாதார நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் முதுகலை பட்டதாரி பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுதும் மருத்துவர்க்கள் மடுமல்லாமல் பொதுமக்களின் சீற்றமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
“எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற இதுவே ஒரே வழி. போலீசார் இருக்கும் போதே சிலர் மருத்துவமனைக்குள் நுழைந்து எங்களை தாக்குவது எப்படி? மருத்துவமனை வளாகம் வெகுவாக தாக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது நடந்துவரும் போராட்டம் காரணமாக, SSKM மருத்துவமனை, சம்புநாத் பண்டிட் மருத்துவமனை மற்றும் கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு மருத்துவமனைகளில் நான்-எமர்ஜன்சி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளும் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்திய மருத்துவ சங்கத்தின் (India Medical Association) அழைப்பை ஏற்று, வழக்கமான OPD சேவைகளை நிறுத்தி வைப்பதாக மணிபால் மருத்துவமனைகள் அறிவித்தன.
கடந்த வாரம் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்தபோது 31 வயது பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ஆகஸ்ட் 15 அதிகாலையில் ஒரு கும்பல் மருத்துவமனையின் சில பகுதிகளை சேதப்படுத்தியது.
குற்றம் நடந்த இடத்தில் தடயங்களை அழிப்பதற்காகவே இந்த கும்பல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சந்தேகங்கள் உள்ளன.