மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருப்புக் கொடி போராட்டம். மதுரையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புகொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்து இருந்தது. ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்த விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக போராடி பலமுறை சிறை சென்றவர்.

தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர் ஏன் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, ஆளுநர் பொய்களை மட்டுமே பேசி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என அறிவித்து இருந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் 150க்கும் மேற்பட்டோர் கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஆளுநருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.