நடிகை பிரியாமணி தற்போது இந்தி படங்கள், வெப் தொடர்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ”தி ஃபேமிலி மேன்” தொடரில் ”ரா” பிரிவு அதிகாரியாக நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ”ஜவான்” திரைப்படத்தில் வில்லன்களுக்கு எதிரான போராளியாக நடித்தார். ”மைதான்” என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது ”கொட்டேஷன் கேங்” என்ற தமிழ் படத்தில் கூலிப்படை தலைமையாக நடிக்கிறார். இந்த படத்தை பிலிமிநதி என்டர்டைன்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷ் உடன் இணைந்து விவேக் குமார் கண்ணன் தயாரித்து, இயக்கி உள்ளார்.

ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜுன், அசோக் மல்லி சேரி, அக்ஷயா உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிபதிவு செய்து உள்ளார். ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் வினோத்குமார் கண்ணன் கூறியவாறு;
”இது கேங்ஸ்டர் பின்னணியிலான க்ரைம் திரில்லர் படம். கதைப்படி நாயகி பிரியாமணி சந்தர்ப்ப சூழ்நிலையால் கேங்ஸ்டர் கூட்டத்தில் இணைந்து விடுகிறார். பின்னர், தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கூலிக்காக கொலை செய்யும் கும்பலுக்கு தலைவி ஆகிறார். அதில் தொடர்ந்து அவர் நீடித்தாரா? வெளியில் வந்தாரா? என்பதுதான் கதை. அவரை சுற்றி கதை நடந்தாலும் இது ஒரு ஹெபர் லிங் கதை.

போதைக்கு அடிமையான சாரா அர்ஜுன், காஷ்மீரில் வாழும் லெஸ்பியன் ஜோடிகளாக இருக்கும் கிரா, சோனல் ஆகியோரின் கதையும் பிரியாமணியின் கதையோடு இணையும். காஷ்மீர், மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் படபிடிப்பு நடத்தி உள்ளோம்.
இந்த படத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் பிரியாமணி துணிச்சலுடன் நடித்துக் கொடுத்தார். படத்தில் அவர் டூப் போடாமல் நடித்த பல சண்டைக் காட்சிகளும், கொலைக் காட்சிகளும் இருக்கிறது. கேங்ஸ்டர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கும் தரகராக ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். அவரது மனைவியாக சன்னி லியோன் நடித்துள்ளார். அடுத்த மாதம் தியேட்டர்களில் திரைப்படம் வெளியாகிறது” என கூறினார்.