கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவின் பணிநீக்கத்திற்கு கனிமொழி எம்.பி , அவருக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் தனியார் பேருந்து ஓட்டி வருகிறார். இவர், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஷர்மிளாவை பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இரு வாரங்களுக்கு முன்பு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இந்நிலையில் இன்று காலை திமுக எம்.பி கனிமொழி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து, அவருடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து, சில மணி நேரங்களில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஷர்மிளா கூறுகையில்,”பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி உடன் வந்தவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால், பேருந்து உரிமையாளரிடம் இந்த விவகாரம் குறித்து கூறுவதற்காக சென்றேன். ஆனால், அவர் முதலில் நடத்துனர் செய்தது தவறு என்று கூறினார். பின்பு, அதை ஒப்புக்கொள்ளவில்லை. கனிமொழி எம்.பி வருவதை முன்கூட்டியே நான் மேனேஜருக்கு தெரிவித்தேன். அனால், அவர் நான் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறினார். பின்னர், எனது அப்பாவிடம் வெளியே போங்க என்று கூறினார்’ என கண்ணீர் மல்க அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் கூறுகையில்,”பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவும், அவரது தந்தையும் சத்தம் போட்டு சண்டையிட்டுக் கொண்டனர். ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை.அவருக்கு நடத்தநருடன் தான் பிரச்னை” என பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே வானதி சீனிவாசன்,”கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிடம் பேசினேன். அவருக்கும் பெண் நடத்துநருக்குமான வார்த்தை பரிமாற்றமே பிரச்னைக்கு காரணமாக இருந்துள்ளது.ஓவ்வொரு நாளின் அனுபவங்கள் வாய்ப்புகளாக வளர்ச்சியாக மாறட்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.