இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் நடைபெறும். இந்தியாவின் பதினேழாவது மக்களவைக்கான மக்களவை பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. இந்த பதினேழாவது மக்களவை கலைக்கப்படாத வரையில் இது 2024 ஆம் ஆண்டு வரை செயல்படும். அதன் பின் இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 ஆம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும்.

மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA – கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை இந்தியா டுடே – சி வோட்டர் சார்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 39 தொகுதிகளையுமே திமுக கூட்டணி கைப்பற்றும் என அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி முதலிடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், இதர கட்சிகளுக்கு 13 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 சதவீத வாக்குகளை இக்கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 16 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும், பாஜக 20 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியை கைப்பற்றலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.பொருத்திருந்து பார்க்கலாம்.