இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உயரிய நிலையை அடையவும், ஒருசில காரணங்களால் தேர்ச்சி அடையாதவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று சிறக்கவும் எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பானது என்பதைப் புரிந்து கொள்வதுடன், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்நாட்டில் இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அனைவருக்கும் உங்கள் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
முதல் முயற்சியில் பெறுவது மட்டுமே வெற்றியல்ல,ஒருவேளை வெற்றியை தவற விட்டிருந்தாலும் உங்கள் விடாமுயற்சியால் தேர்விலும் வாழ்விலும் புதிய வெற்றிகளை பெற்று வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.