இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!

2 Min Read
தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.

- Advertisement -
Ad imageAd image

இன்று ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் அனுசரிக்கும் நிலையில் , இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்து கூறி அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில்,”மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

அன்பை. அடக்க உணர்வை. எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு” என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம். சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.

நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு. ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில்,”இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில்,” தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review