தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921 ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தபோதே சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
1964ல் கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். ஜனசக்தி நாளிதழில் முதல் பொறுப்பாசிரியராக இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரின் முதல் ஆசிரியரும் ஆவார். தீண்டாமை ஒழிப்பு, சாதிமறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர்.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்தவர். வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 95 வயதிலும் ஆணவக்கொலைகளுக்கு எதிராக போராடியவர். இவர் இன்று காலை 9 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
சங்கரய்யா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சங்கரய்யா.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைவுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கு சங்கரய்யா மறைவு ஒரு பேரிழப்பாகும்.

முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு வைஃகை செல்வன் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவப் பருவம் தொட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை ஒப்புக் கொடுத்த ஒப்பற்ற தலைவர் மறைவுக்கு வீர வணக்கம்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற மகத்தான போராளி சங்கரய்யா என திருமாவளவன்புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், தோழர் சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன் நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.