பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன்

0
63
வேல்முருகன்

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு மற்றும் பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக, பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது.

இப்பணியில், 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணைபோடும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.  இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர பணி, மாற்று இடம்,ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்,தொழிற் பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் நிரந்தர பணி வழங்க வேண்டும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு விரிவாக்கும் பணியை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன.

அன்புமணி

இந்நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சிறிதும் மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில், சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், முற்றுகை போராட்டம் நடந்தது.

பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் நடந்த அமைதி வழியிலான போராட்டத்தின் போது, அன்புமணி உள்ளிட்ட பாமக தோழர்கள் மீது, தமிழ்நாடு காவலதுறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதும், தண்ணீர் பீய்ச்சி அடித்ததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தோழர்களை மிரட்டிய காவல்துறை, அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இத்தகைய சர்வாதிகார போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ள விளைநிலங்கள் தயாராக இருக்கும் நிலையில், அதனை என்.எல்.சி நிறுவனம் அழித்தொழிப்பதை, தமிழ்நாடு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது.

எனவே, விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதற்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு துணைபோகும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, கைது செய்யப்பட்டுள்ள பாமக தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here