கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தமிழக – கர்நாடக மாநில எல்லைப் பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. இதனால் 24 மணி நேரமும் மேட்டுப்பாளையம், கோவை,சத்தி,அவிநாசி சாலைகளில் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில் அன்னூர் கைகாட்டி பகுதி அருகே சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்து குறைவாக இருந்த நேரத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து தலைமை காவலர் ஜேம்ஸ் குண்டும்,குழியுமாக இருந்து விபத்தினை ஏற்படுத்திய சாலையில் இருந்த பள்ளத்தினை கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பிவிட்டு பின்னர் அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். போக்குவரத்து காவலரின் இச்செயலை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகவே பாராட்டி வருகின்றனர்.
இதனைக்கண்டு அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும்,இதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.