சமூக வலைதளங்கள் பல்வேறு வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் கூட சில நேரங்களில் அவை கேடுகள் விளைவிக்கும் ஒரு செயலியாகவே இருந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் சமூக வலைதளம் மூலமாக பழகி அனாதை எனக்கூறி ஆறு பேரை திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகாலட்சுமி இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாலகிருஷ்ணன் இறந்து போக பாலாஜி என்கிற கட்டிட மேஸ்திரியுடன் மகாலட்சுமிக்கு நெருக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ஊட்டியில் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி நாளடைவில் பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மூன்றாவதாக ஊட்டியை சேர்ந்த பெயிண்டர் மணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருடன் மூன்று மாதமே குடும்பம் நடத்தி நிலையில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக நான்காவது கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அருள் என்பவரிடம் சமூக வலைதளத்தின் மூலம் பழகி தன்னை அனாதை எனக்கூறி அவருடன் குடும்பம் நடத்தி, பணம், நகையை கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து அருள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் முகநூலில் பழகி, தான் அனாதை தனக்கென யாரும் இல்லை தனக்கு வாழ்க்கை அளிக்குமாறு கூறியுள்ளார் மகாலட்சுமி. அதை நம்பி மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் அப்பெண்ணை அவலூர்பேட்டையில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவருடன் ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய மகாலட்சுமி மணிகண்டன் வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் படத்தை எடுத்துக்கொண்டு மாயமானார். மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக் கூறி அவர் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கடந்த ஆறு மாதமாக தேடி வந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் என்பவருடன் ஆறாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வளத்தி போலீசார் நேற்று ஆத்தூர் பகுதிக்கு சென்று சின்ராஜையும், மகாலட்சியமும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தான் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் வெளியானது.
ஆறு திருமணம் செய்து பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்த கல்யாண ராணி பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.