கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி அண்ணா நகரில் பிரபல தனியார் மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள் வட மாநில நபர்கள் தங்குவதற்காக தனித்தனி அறைகள் மில்லுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு நேரங்களில் அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் செல்போன்கள் திருடு போவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முகமூடி அணிந்து கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வட மாநில நபர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.
அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் இதனை பார்த்து வெளியே வந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து தப்பித்து சென்ற கும்பல் திருடிய செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தலைமுறைவாகியுள்ளது. உடனடியாக இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தனி படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது திருடு போன செல்போன்களை விற்பனை செய்வதற்காக கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கடைக்கு கும்பலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார் அவரை மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமத்குமார் மாலிக் என்பதும், இவருக்கு உறுதுணையாக பிரதாப் மாலிக் ராஜேஷ் மாலிக் என்ற இருவரும் இணைந்து இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் கருமத்தம்பட்டியில் பதுங்கி இருந்த மற்ற இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.