சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகரில், காணும் பொங்கல் தினத்தில் உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டிக்கபட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் திருவக்குளம் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மகன் அருண்பாண்டியன் வயது (28). சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி, நேற்று முன்தினம் இரவு அருண்பாண்டியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரை மகன் செந்தில் வயசு (43), மற்றும் சிலர் திடல் வெளியில் குழுவாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போழுது, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அருண்பாண்டியனை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதனை செந்தில் தடுக்க முயன்ற போது, இவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அந்த மர்ம நபர் அருண்பாண்டினை கழுத்தில் வெட்டியதில், அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அருண்பாண்டியன் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கயில் வெட்டுப்பட்ட செந்திலை மீட்டு புதுச்சேரி ஜீப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடலூரில் இருந்து இரண்டு போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, அவை திடல்வெளி பகுதியில் இருந்து மோப்பம் பிடித்த படி, சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று நின்றது. ஆனால் யாரையும் ஓடி கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அருண்பாண்டியனுக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்ததா என அப்பகுதி மக்களை விசாரித்து, இது சம்பந்தமாக இந்த கொலை நடந்திருக்கலாம். என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை குற்றவாளியை பிடிக்க மாவட்ட எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையில், நகர போலீஸ் ஆய்வாளர் ஆறுமுகம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி, கொள்ளிடம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.