- ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 6ம் தேதி தமிழக முழுவதும் 58 இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் தரப்பிலும், திண்டுக்கல் மாவட்ட ஆர்எஸ்எஸ் தரப்பிலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திருப்பூர் ஆர் எஸ் எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் ஆர் எஸ் எஸ் இணைச் செயலாளர் சேதுராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், ஆர் எஸ் எஸ் அணிவகுப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த ஊர்வலங்களுக்கு விதிமுறைகளை வகுத்து கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், தமிழக அரசும், காவல்துறையும் செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.