ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்த மனு தள்ளுபடி செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீதான பாஜகவின் அவதூறு வழக்கை விசாரித்த சூரத் பெருநகர நடுவர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி, ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கியது.
இதனையடுத்து, நடுவர் நீதிமன்றம் தனது தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைத்து, ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தந்தது. ஆனால், குஜராத் மாநில அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம் மூலம் நெருக்கடி மறுநாளே ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை பறித்தது.

இதனைத் தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் நியாயம் கேட்ட ராகுல்காந்திக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிர்கட்சிகள் கூட்டணியால் படுதோல்வி அடைவோம் என்பதை உணர்ந்து கொண்ட பாஜக ராகுல்காந்தியை தேர்தல் களத்தில் இறங்க விடாமல் தடுக்கும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாகவே குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, ஒன்றுபட்டு வரும் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் தாக்குதலை நடத்தி வருகிறது.
பாஜகவின் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு நீதித்துறையும் இரையாகி விட்டதோ என்ற ஆழ்ந்த சந்தேகத்தை குஜராத் உயர்நீதி மன்றத்தின் தனி நபர் அமர்வின் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது .

ஆர் எஸ் எஸ், பாஜக , பரிவார் சக்திகளின் அதிகார அத்துமீறல்கள் அனைத்தையும் முறியடித்து, ஜனநாயக சக்திகள் மக்கள் பேராதரவைத் திரட்டி, வரலாறு காணாத தீர்ப்பு வழங்கி, , சீப்பை மறைத்து வைத்து, கல்யாணத்தை நிறுத்து முடியாது என்ற முதுமொழி பாடத்தை சங் பரிவார் கும்பலுக்கு நாடு கற்பிக்கும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துச் கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.