கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கோவையின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி கடந்த 24-ம் தேதி ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.
இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்தார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்பி அவரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கு ஷர்மிளா வேண்டாம் எனக் கூறியுள்ளார். மேலும் தான் ஆட்டோ ஓட்டப் போவதாக தெரிவித்துள்ளார். அதற்கு கனிமொழி எம்பி, தேவையான பண உதவி, வங்கிக் கடன் உதவிகளை செய்து தருகிறேன்” என உறுதி அளித்தார்.
இந்தநிலையில், பெண் ஓட்டுநர் சர்மிளா மற்றும் அவரது பெற்றோரை நேரில் வரவழைத்து கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டும் எனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்பட செய்து வந்தார். அதற்காக பல்வேறு தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த சர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவுக்கு வழங்குகிறது. வாடகை கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
கால் டாக்ஸி பயன்பாட்டுக்காக Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணம் கொடுத்துள்ளதாக சர்மிளா தெரிவித்தார்.