நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தர்மபுரியில் நடந்த 101 ஜோடிகள் திருமணம் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல் இல்ல திருமண விழா குண்டல் பட்டியில் நடைபெற்றது. இதில் 100 ஜோடிகளுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இலவச திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது;

திமுகவின் முக்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூபாய் 30 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு எப்படி முதலீடு செய்வது என்று தடுமாறுவதாக அமைச்சர் ஒருவரின் ஆடியோ பேச்சு வெளியானது. திமுக அரசு ஒரு ஊழல் அரசு. செய்யாற்றில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளில் 7 பேர் மீது குண்டார் சட்டம் பாய்ந்தது. விவசாயிகள் ரவுடிகளா? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடுமையான எதிர்ப்பு கிளம்பிய பின் 6 விவசாயிகள் மீது குண்டார் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அறவழியில் போராடி விவசாயிகளை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் கேட்கிறார்கள்.

விவசாயிகள் மீதான இந்த அடக்கு முறைக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ரூபாய் 35 ஆயிரம் போராட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. பல்வேறு கோரிக்கைகளை பரிசளித்து நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக குடும்ப ஆட்சி நடத்துகிறது. அங்கு உழைப்புக்கு மரியாதை இல்லை. அடுத்து உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. இது ஜனநாயக நாடு ஆட்சி அதிகாரத்தை ஒரே குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுக்கவில்லை. இங்கு மன்னர் ஆட்சியர் நடக்கிறது? அடுத்த சட்ட சபை தேர்தல் தமிழ்நாட்டின் அதிமுக ஆட்சி அமையும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.