பெண்களை மதிக்காதோருக்கு பாஜகவில் இடமில்லை.. சூர்யாவை மறைமுகமாக சாடிய அமர் பிரசாத் ரெட்டி

0
44
அமர் பிரசாத் ரெட்டி

விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உண்மை பிம்பம் உடையும் என பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நிலையில், அவரை மறைமுகமாக சாடும் வகையில் அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில், பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். தன்னை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக திருச்சி சூர்யா சிவா காட்டிக் கொண்டார். இந்த நிலையில், பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவருடன் பேசிய செல்போன் உரையாடல் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவிற்கும் இந்த விவகாரம் அதிர்வுகளை கொடுத்தது. டெய்சியை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ விவகாரம் அண்ணாமலைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சூர்யா சிவாவை பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆணையிடுவதாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து சூர்யா சிவாவும் டெய்சியும் சமாதானமாவதாக அறிவித்தனர். இந்த நிலையில் சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று திருச்சி சூர்யா சிவா, அண்ணாமலைக்கு எதிராக திடீரென தனது ட்விட்டரில் பதிவிட்டார். அதாவது, அதில், “கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்.” என்று பதிவிட்டு இருந்தார். அண்ணாமலைக்கு எதிரான திருச்சி சூர்யா சிவாவின் பதிவு பாஜகவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவரும் அண்ணாமலையின் வலதுகரம் என்று கட்சியினரால் சொல்லப்படும் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா சிவாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அமர்பிரசாத் ரெட்டி கூறியிருப்பதாவது:- பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு, எப்போதும் போதையில் மிதப்போருக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்போருக்கு, திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்போருக்கு என்றுமே பாஜகவில் இடமில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு!” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here