நியாயம்கோரி போராடிய மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீது 7 பிரிவுகளில் வழக்கு

3 Min Read
கைது செய்யப்படும் மல்யுத்த வீரர்

இந்திய வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி  டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கணைகள் நடுரோட்டில் இழுத்த செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இவர் பாஜக எம்பியாகவும் இருக்கிறார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே இந்த  சம்பவம் குறித்து விசாரணை குழு விசாரித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.குற்றம் செய்ததாக கூறப்படும் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கணைகள் கடந்த மாதம் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர்.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போக்சோ உள்பட 2 பிரிவுகளில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் போராட்டம் என்பது தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி, ஆம்ஆத்மி கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன.சில  தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கைது செய்யப்படும் மல்யுத்த வீரர்

இந்நிலையில் தான் போராட்டத்தைவிரிவுபடுத்தும் விதமாக புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவையொட்டி நியாயம் கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலையில் டெல்லி ஜந்தர் மந்திரில் இருந்து மல்யுத்த வீராங்கணைகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாக வந்தவர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை வழிமறித்து குண்டுகட்டாக கைது செய்தனர்.

நாட்டிற்காக ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்பட பலர் போராட்டத்தில் இருந்து தரதரவென இழுத்து செல்லப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டெல்லி மகளிர் ஆணையமும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு வீராங்கணைகள் உள்பட அனைவரையும் விடுதலை செய்துவிட்டு உடனடியாக பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில் தான் டெல்லியில் காவல்துறை போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. அதாவது மல்யுத்த வீரர், வீராங்கணைகளான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளபட போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும், பிடிபிபி சட்டத்தின் கீழ் ஒரு பிரிவு என மொத்தம் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனை சட்டமான ஐபிசி 147 (கலவரத்துக்கான தூண்டுதல்) ஐபிசி 149 (சட்டவிரோதமாக கூடுதல்), ஐபிசி 186 (அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்), ஐபிசி 188 (அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்படுதல்), ஐபிசி 332 (தானாக முன்வந்து காயங்களை ஏற்படுத்துதல்), ஐபிசி 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தாக்குதல்) மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்புக்கும் வகையிலான சட்டத்தின் 3வது பிரிவு (பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் வகையில் தவறான செயலில் ஈடுபடுதல்) என 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Share This Article
Leave a review