நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை ஓபிஎஸும்,அமமுகவும் தான் தீர்மானிக்கும்-டி.டி.வி தினகரன்.!

0
28
டி.டி.வி தினகரன்.

நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஓபிஎஸும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என நெல்லையில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் , அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் நெல்லை மாவட்ட சிப்காட் நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக கையகப்படுத்தும் செயலை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாமிரபரணி நதி சாக்கடை கழிவுகளால் அசுத்தமாகி வருகிறது.

மீண்டும் அதன் புனித தன்மையை மேம்படுத்த தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், 50 ஆண்டுகளாக இருக்கும் கட்சிகளுடன் போட்டியிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த ஆறு ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கிளை கழகங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் விவசாய நிலங்களை அரசு தன்னிச்சையாக கையகப்படுத்தி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டு நீதிபதியும் கண்கலங்கி பேசியுள்ளார்.

நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணியை போலீசாரை வைத்து தமிழக அரசு கைது செய்துள்ளது. ஸ்டாலின் ஹிட்லரைப் போல் மாறிவிட்டார். பாராளுமன்ற தேர்தல் தாண்டிய பின்னர் பழனிச்சாமி என்ற நபர் என்ன ஆக போகிறார் என்ற நிலை தெரியாமல் போய்விட்டது. கொடநாடு பங்களாவில் பணி செய்தவர்கள் மர்ம மரணம், வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்கள் மர்ம மரணம் போன்றவை திரைப்பட  பாணியை போல் நடந்து வருகிறது.

ஆகஸ்டு 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து கொடநாடு வழக்கு கொலை,கொள்ளை சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்களையும் பின்னணியில் இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதல்வரான பின்னர் விடியல் ஆட்சி தருவோம் என சொல்லிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சி நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 15 சதவீதம் கமிஷன் இருந்தது. திமுக ஆட்சியில் கமிஷன் தொகை 25 ஆக மாறிவிட்டது. எம்ஜிஆர் ஜெயலலிதா சின்னத்தை வைத்துக்கொண்டு தொண்டர்களை ஏமாற்றி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும்.

டி.டி.வி தினகரன்.

நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றி கணக்கை தொடங்க அனைவரும் பணியை மேற்கொள்ள வேண்டும். யார் வரக்கூடாது யார் வெற்றி பெறக் கூடாது என்பது நமக்கு நன்றாக தெரியும்.
அம்மாவின் பெயரும் கட்சியும் சின்னமும் போலிகளின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டும் தனித்துப் போட்டியிடுவதற்கும் நாம் தயார் நிலையில் இருக்கிறோம்.
அம்மாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே நமது நோக்கம். யாருடனும் நேர்மையற்ற முறையில் நாங்கள் சமாதானம் செய்ய மாட்டோம். மக்கள் போலிகளை அடையாளம் கண்டு நமக்கு
தோளோடு தோல் நிற்பார்கள். பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை என்றால் யாராலும் வெற்றியை பெற முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை ஓபிஎஸும்,அமமுகவும் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here