பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்,ஆயுத பூஜை, வரும் 23 ஆம் தேதியும், விஜய தசமி அதற்கு மறுநாளும் கொண்டாடப்படவுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் ஏராளமான மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆயுத பூஜையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அதன்படி, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. வேலூர், ஆரணி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பணிமனை அருகே இருந்து புறப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட ஊர்களைத் தவிர, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கூடுதலாக 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, பெங்களூரு, கோவை, திருப்பூர் நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மட்டுமல்லாமல் வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வெளியூர் செல்லும் பயனிகளுக்கு இந்த பேருந்து அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.அதே போன்று வெளியூருக்கு சென்று திரும்புவதற்கும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அந்த அறிவிப்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.பயனிகள் பாதுகாப்பாக பயனிக்க இது உதவும்.