காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த, அவர்களின் தேவையறிந்து, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பதிவில்,”மேட்டூர் அணையில் இருந்து நேற்று (12.06.2023) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதனால் குறித்த பருவத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு சிறந்த மகசூலை பெறமுடியும்.
காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், கடைமடை பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதற்கான பூர்வாங்க பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். விவசாய பகுதிகளில் அனைத்து இடங்களிலும் விதை நெல் தங்குதடையின்றி கிடைக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு மான்ய விலையில் வழங்கப்படும் விதைநெல் அவர்கள் பயிரிடும் பரப்பளவிற்கு ஏற்ப வழங்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் உழவாரப் பணிகளைமேற்கொள்ளும் போது அவர்களுக்கு தேவையான இயந்திரங்கள், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் முன்னெச்சரிக்கையாக தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு காலத்தாமதமின்றி பயிர்கடன் வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்த விவசாயப்பகுதிகளில் பல விவசாயிகளுக்கு இன்னும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை, அவர்களுக்கு தற்பொழுது வழங்கினால் உழவாரப் பணிகளை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும் குறுவை பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
இயற்கையின் உதவியால் இந்த வருடம் விவசாயத்திற்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயம் குறித்தப் பருவத்தில் துவங்கப்பட்டால் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறந்த மகசூலை பெறமுடியும். அதற்கான அடிப்படை வசதிகளை தமிழக அரசு காலதாமதமின்று வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.