சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அவர் பெரிதாக நடக்காமல், காரிலேயே பயணம் செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார். அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது.
பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும்.
நவீன கழிப்பறை, குளியலறை என்று பொதுவாக கேரவனில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் உள்ளன. இந்தநிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அவர் பெரிதாக நடக்காமல், காரிலேயே பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை:
அண்ணாமலையின் நடைப்பயணத்தை உற்று கவனித்து வருகிறது மாநில உளவுத்துறை. ஒவ்வொரு நாளும் பயணத்தில் நடக்கும் விசயங்களை அன்றைய தினம் மாலையில் முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பி வருகிறார்கள் உளவுத்துறையினர். நடைப்பயணத்தில் எந்த தாக்கமும் இல்லை என்பது தான் மூன்று நாளில் அனுப்பி வைக்கப்பட்ட ரிப்போர்ட் சொல்கிறது. அதாவது, பொதுவாக அரசியல்வாதிகளின் நடைப்பயணம் என்றாலே, காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணமும் சரி, காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர்.
இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். 12 மணி வரைக்கு பயணத்தை முடித்துக் கொண்டு விட்டு மதிய
உணவுக்காகத்தான் காரில் பயணிப்பார்கள். அதன் பிறகு மாலை 4 வரை ஓய்வெடுப்பர். அந்த சமயத்தில் கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பிறகு மாலை 4 மணிக்கு பயணம் மீண்டும் தொடரும். இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் சராசரி 50 ஒரு நாளைக்கு கி.மீ.வரை நடப்பார்கள்.
ஆனால், அண்ணாமலையோ தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகிறாராம். 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். வாகனம் புறப்படுகிறது. சிலபல கிலோ மீட்டர்கள் கேரவனில் சென்றதும் அந்த பகுதியிலுள்ள மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து சிலரிடம் பேசுகிறார். மீண்டும் கேரவனில் பயணம். குறிப்பிட்ட தூரம் சென்றதும் மதியம் சாப்பாடு. அப்படியே கேரவனில் ரெஸ்ட். கட்சிக்காரர்களிடம் விவாதிக்கிறேன் என்ற பேரில் இந்த ரெஸ்ட் எடுக்கிறார் அண்ணாமலை. பிறகு 6 மணிக்கு மேல் மீண்டும் கொஞ்ச தூரம் நடக்கிறார். பிறகு கேரவன் பயணம். ஆக, 1 நாளைக்கு அதிகப்பட்சம் 5 கிலோ மீட்டர் மட்டுமே நடக்கிறார்.
மீதியெல்லாமே கேரவனில் தான் பயணம் என்று உளவுத்துறையின் ரிப்போர்ட் சொல்கிறது. இது ஒரு புறமிருக்க, ” தலைவர் 1 நாளைக்கு 5கிலோ மீட்டர்தான் நடக்கிறார். மற்றப்படி காரில் தான் போகிறார் என விமர்சனம் வரும். இதை தலைவரிடம் எப்படி சொல்வது ? இது எப்படி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ” என்று நடைப்பயணத்தில் அவருடன் செல்லும் பாஜகவினரே விமர்சிக்கின்றனர்