சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் . ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது .
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக 2019-ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கடந்த மாதம், சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு ராகுல் காந்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் கொடுத்தது நீதிமன்றம்.
மேலும், இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த நாளே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டு, வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர் .
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஒரு வழக்கு :
சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர், இந்துத்துவ கொள்கைகளைப் பரப்பியவர். 1910ம் ஆண்டு நாசிக்கில் ஆட்சியர் ஜாக்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தின் நகலை, கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் நடைப்பயணம் மேற்கொண்ட போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.
இது சாவர்க்கரை அவமதிக்கும் செயல் என்று பாஜக தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவதூறு கருத்துகளை ராகுல் தெரிவித்ததாக சூரத், பாட்னா நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் , புனே நீதிமன்றத்திலும் சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.