பள்ளிகள் திறப்பு
மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ் காண்பித்து அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் கடைசி மற்றும் மே தொடக்கத்தில் கோடை வெயில் கொளுத்து எடுத்தது. பல இடங்களில் வெப்ப அலை வீசியது. வெயில் மற்றும் லோக்சபா தேர்தல் முடிவு (ஜுன் 4ம் தேதி வெளியாகிறது) ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
பழைய பஸ் பாஸ்
ஆனால் கடந்த 3 வாரமாக தமிழ்நாட்டில் கோடை வெயில் முற்றிலுமாக குறைந்தது. அதோடு கோடை மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் பள்ளி கல்வித்துறை தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டது. அதன்படி கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 6ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்டுத்திக்கொள்ள போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.