இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார் . அப்பொழுது அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .
ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதப்பொருளானது. கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பா.ஜ.க. தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே அவர் கர்நாடக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை தேர்வுசெய்யும் பணிக்காக டெல்லி சென்றார். அங்கு கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருடன் தங்கி கடந்த 2 நாட்களாக இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் பணி குறித்து பிரதமர் மோடியிடம் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதற்கு பிரதமர் அவரிடம், ‘வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் டெல்லியிலே இருந்து அதில் கவனம் செலுத்துங்கள். சென்னைக்கு வர வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார் என்பது போல , அண்ணாமலை அப்செண்ட்டுக்கு பாஜக கட்சி மேலிடத்திலிருந்து அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது .