- இறந்த தந்தை உடலை வேறு ஒரு குடும்பத்தினருக்கு வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவாரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு கடந்த 14ம் தேதி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து ராஜேந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் காரைக்கால் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போதுதான், ராஜேந்திரனின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது தெரியவந்தது.
இதனால், தன்னுடைய தந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரியும் ராஜேந்திரனின் மகன் ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,”என்னுடைய தந்தை ராஜேந்திரன்; காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார்.
கடைசியாக, என் தந்தையை ஜூன் மாதம் திருநள்ளாறில் பார்த்தேன். அவருக்கு மொபைல் போன் பயன்படுத்த தெரியாது. கடந்த 14ம் தேதி, காரைக்கால் சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன், என் வீட்டுக்கு வந்து புகைப்படம் ஒன்றை காண்பித்து, ஜூலை 22ல் தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மறுநாள் தந்தையின் உடலை பெற குடும்பத்தினருடன், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, தந்தையின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டினர்.
தந்தையின் உடலை வேறொரு குடும்பத்திடம் வழங்கியது தெரியவந்தது. காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம், கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் உடலை பெற்ற வேறொரு குடும்பத்தினர், 15 நாட்களுக்கு முன் இறுதி சடங்குகள் முடித்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில், இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தந்தை இறப்பில் சந்தேகத்தை உருவாக்குகிறது. இயற்கை மரணம் போல தெரியவில்லை.
அலட்சியம் மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ், மருத்துவமனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை, காரைக்கால் கலெக்டர் உள்ளிட்டோர் எடுக்க வேண்டும். டி.என்.ஏ., உள்ளிட்ட அறிவியல்பூர்வ சோதனையை நடத்தி, என் தந்தையின் உடலை ஒப்படைப்பதோடு, குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.