ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோரமண்டல் அதிவிரைவு ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிக்கொண்டதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் தவறா? சிக்னல் கோளாறா?
ஒடிசா ரயில் விபத்தில் பல காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயர்மட்ட குழு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு பச்சை சிக்னல் கொடுத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டதால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய ரயில், லூப் லைனுக்கு சென்று சரக்கு ரயிலில் மோதியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ்-ன் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்ததால், அந்த வழியே வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ்-ம் விபத்தில் சிக்கியுள்ளது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
‘கவாச்’ தொழில்நுட்பம் என்ன ஆனது?
ரயில் மோதல் மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் ‘கவாச்’ எனும் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஒடிசா ரயில் விபத்தின் போது என்ன ஆனது என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். வந்தே பாரத் போன்ற ரயில்கள் அறிமுகப்படுத்திய பிறகும் இந்த மாதிரியான விபத்துகள் நடைபெற்று கொண்டு வருகிறது.
ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படும் ‘கவாச்’ என்னும் பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை. ரயில்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தரும் ‘கவாச்’ என்னும் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானது ஏன்?
ஒடிசா ரயில் விபத்தின் போது ஏ.சி.பெட்டிகள் அதிகளவில் தடம் புரண்டுள்ளது. ஏ.சி.பெட்டி ஜன்னலில் தடுப்புக் கம்பிகள் இருக்காது. பெட்டிகள் கவிழ்ந்த வேகத்தில் ஜன்னல் வழியே பயணிகள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். பின்பு பயணிகள் மீது பெட்டிகள் விழுந்ததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நார்மல் ஸ்லீப்பரில் ஜன்னலில் தடுப்புக் கம்பிகள் இருந்ததால் பயணிகள் அந்த பெட்டியில் காயம் அடைந்துள்ளதாக மட்டுமே கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், உயர் அதிகாரிகள் கூறும் போது, எத்தனை நாள்களுக்கு ஒரு முறை தண்டவாளங்களை பரிசோதிக்கப்படுகிறது. கவாச் சிஸ்டம் நடைமுறையில் தான் உள்ளதா? தண்டவாளங்களுக்கு இடையிலும், ரயில்களிலும் கவாச் சிஸ்டம் இருக்க வேண்டும். அனால், ரயில் விபத்தின் போது அது என்னவாயிற்று? ரயில் லூப் லைனில் சென்றது ஏன்? சிக்னல் மாறியது எப்படி ? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.